புரட்டாசி சனிக்கிழமை விரதம்

புரட்டாசி சனிக்கிழமை வழிபடுவதால் என்ன நன்மை!

கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். கன்யா (புரட்டாசி) மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.

மஹாவிஷ்ணுவுக்கு உகந்த புரட்டாசி: பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

எவ்வாறு வழிபட வேண்டும்?

புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரிய வன் என்பது அர்த்தம். ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூ லோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

Divine Talking Clock